ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள் சாவு : மேலும் ஒரு பெண் கதி என்ன?


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள் சாவு : மேலும் ஒரு பெண் கதி என்ன?
x
தினத்தந்தி 20 Sept 2018 3:30 AM IST (Updated: 20 Sept 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 பெண்கள் இறந்தனர். மேலும் ஒரு பெண் கதி என்ன? என்பது தெரியவில்லை.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் கிராமத்தில் நெல் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆலத்துக்கோம்பை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று முன்தினம் அரியப்பம்பாளையத்திற்கு நடவு பணிக்கு சென்றனர். அங்கு வேலையை முடித்துவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள். அப்போது பவானி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றதால், அவர்கள் நடந்தே சென்று ஆற்றை கடந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையிலும் 13 பெண்கள் வேலைக்கு புறப்பட்டனர். அவர்கள் ஒரு மினி லாரியில் அரியப்பம்பாளையத்திற்கு சென்றனர். அங்கு நடவு பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது பவானி ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் பவானிசாகர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட தகவலை அறியாத அவர்கள் ஆற்றை கடக்க முயன்றனர். ஆனால் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்ற பிறகுதான், தண்ணீரின் இழுவை அதிகமாக இருந்தை அவர்கள் உணர்ந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கைகளை கோர்த்தபடி ஆற்றில் நடந்து சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் கரைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அவர்களுடைய அபயகுரல் சத்தம்கேட்டு ஆலத்துக்கோம்பையை சேர்ந்த ரஜினி என்பவர் அங்கு வந்தார். அவர், ஆற்றில் சிக்கி தவிக்கும் பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். இதில் 9 பெண்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் பரவியதும், கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே ஆற்றில் சிறிது தூரத்தில் தத்தளித்து கொண்டிருந்த ஆறுமுகத்தின் மனைவி மல்லிகா (வயது 45) என்பவரையும் ரஜினி மீட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மற்ற 3 பெண்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசாரும் அங்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து ஆலத்துக்கோம்பையிலும், செம்படாபாளையத்திலும் 2 பெண்களை தீயணைப்பு படை வீரர்கள் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர்கள், ரங்கசாமியின் மனைவி சரசாள் (55), ஆறுமுகத்தின் மனைவி பெரியமணி (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், பழனிசாமியின் மனைவி வசந்தா (45) என்பவர் மட்டும் மீட்கப்படவில்லை. அவர் ஆற்றில் நீந்தி எங்கேயாவது கரை சேர்ந்தாரா? அல்லது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு, ஆற்றில் மூழ்கி இறந்த பெண்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். மேலும், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வசந்தாவை தேடும் பணியையும் அவர் முடுக்கி விட்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஆலத்துக்கோம்பை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story