இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் - கலெக்டர் பேச்சு
இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கல்லம்பாளையத்தில் நடந்த நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் இன்னசென்ட்திவ்யா பேசினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றியம் கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூட்டுப்பண்ணைய திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசியதாவது:–
நீலகிரி பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முயற்சி எடுக்க வேண்டும். அதற்கான செலவு மிகவும் குறைவு தான். மேலும் நுண்ணீர் பாசன முறையில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே, விவசாயிகள் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் ஒரு நல்ல நிலையை அடைந்து உங்களுக்கும், சமுதாயத்துக்கும் பயன் உள்ளவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின பயனாளி ஒருவருக்கு செங்கல் சூளை வைப்பதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேருக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகள், மானிய திட்ட கையேடுகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் காவல்துறை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து அந்த பகுதியில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? என்று கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கல்லம்பாளையம், அல்லிமாயார் பகுதியில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள 3 ஆழ்துளை கிணறுகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். அப்போது, 2017–2018–ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 27 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்பிரமணியம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் காசிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பசுபதி, கோத்தகிரி தாசில்தார் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.