அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு பதிவு முகாம்
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு பதிவு முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது.
கோத்தகிரி,
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்க்க சிறப்பு முகாம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூடத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலை மை வகித்தார். இதில், தொழிலாளர் துறை அலுவலர்கள் ஜாஸ்மின், மூர்த்தி, ரேவதி, முரளி ஆகியோர் தொழிலாளர்களிடம் இருந்து நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றனர். பின்னர் தகுதியான தொழிலாளர்களை பதிவு செய்தனர்.
இதில் விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் ஏற்கனவே காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என கிராம நிர்வாக அலுவலர்கள் லதா, அபிராமி, சத்யா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மட்டுமே பயனாளிகள் பதிவு செய்து பயன்பெற முடியும். எனவே தாங்கள் விரும்பும் ஏதாவது ஒன்றில் மட்டும் பதிவு செய்யுமாறு தொழிலாளர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:–
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் மொத்தம் 16 நல வாரியங்கள் ஒன்றிணைக்கப் பட்டு உள்ளது. இதில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உள்ளிட்டவைகளுக்கு உதவித்தொகை பெற முடியும்.
அது போல் அவர்களின் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகை, மகப்பேறு, கல்வி உதவித்தொகை போன்றவை பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிலாளர்களை வாரியத்தில் பதிவு செய்ய இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 100–க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களை வாரியத்தில் பதிவு செய்து கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.