வாக்குச்சாவடிக்கு வரும்போது நம்பிக்கை இருந்தால் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் - கமல்ஹாசன் பேச்சு


வாக்குச்சாவடிக்கு வரும்போது நம்பிக்கை இருந்தால் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் - கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 20 Sept 2018 5:15 AM IST (Updated: 20 Sept 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

நம்பிக்கை இருந்தால் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று பொள்ளாச்சியில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

பொள்ளாச்சி,

கோவை தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதி மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று மாலை பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர். இந்த நிலையில் இரவு 7.15 மணிக்கு கோவையில் இருந்து கார் மூலம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அங்கு வந்தார். பின்னர் அவர் காரில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எனக்கும் பொள்ளாச்சிக்கும் 53 ஆண்டுகால தொடர்பு உள்ளது. நான் சிறுவனாக இருக்கும் போது மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் 1½ மாதம் தங்கி நாடகம் நடத்தி இருக்கிறேன். என்னுடைய பல வெற்றி படங்கள் பொள்ளாச்சியில் உருவாக்கப்பட்டு உள்ளது. மக்கள் நீதி மய்யம் புதிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை தமிழகத்தை உருவாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. புதிய தமிழகத்தை,அரசியல் மாண்பை அனைவரும் இணைந்து மீட்டெடுக்க வேண்டும். நாளை நமதே என்பதற்கு அடையாளம் இங்கே தெரிகிறது. எனக்கு இங்கே பேசுவதற்கு அனுமதி தாமதமாக கிடைத்து இருக்கிறது.

நான் எனது மக்களுடன் பேச கால அவகாசம் நிர்ணயிக்கும் நிலை மாறும். எனக்கு இங்கே பேசுவதற்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒன்று சொல்லி கொள்கிறேன். புரட்சி செய்வதற்கு 3 நிமிடம் போதும். சட்டத்திற்கும் உட்பட்டு, பாசத்திற்கும் கட்டுப்பட்டு விதாண்டாவாதம் பேசாமல் இந்த வாய்ப்பையாவது கொடுத்தார்களே என்று சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில் மீண்டும் வருவேன். அப்போது இன்னும் பெரிய விழாவை நடத்தி காட்டுவோம். அதற்கான ஏற்பாடுகளை அனைவரும் சேர்ந்து செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செந்தாமரைகண்ணன், நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், சிவக்குமார், சுரேஷ், சபரீஸ்வரன், ராஜசேகர், சனோஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அதிக கூட்டம் திரண்டதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கம் சார்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமலஹாசன் பேசியதாவது:–

மக்களை சந்திக்க பயணித்து உள்ளேன். அதுவும் மாணவர்களை சந்திக்க வேண்டும் என்ற பெரும் ஆவல் உள்ளது. அனைவருக்கும் கல்வி அவசியம். அதற்காக அரசியல் தேவையற்றது என்று நினைத்து விட்டு விடாதீர்கள். அரசியல் குறித்து முழுபுரிதல் வேண்டும். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கவில்லை. வாக்குச்சாவடிக்கு வரும் போது நம்பிக்கை இருந்தால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். நல்ல தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

என்னை மட்டும் நடுகாட்டில் விட்டு விடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளமாக மாறும். தெருவை சுத்தம் செய்ய ஒருங்கிணைவோம். நமது அரசியலில் கவன குறைவால் நிறைய குப்பைகள் சேர்ந்து விட்டது. அதை சுத்தம் செய்யும் கடமை நம்மிடம் உள்ளது. நான் இன்னும் பல கல்லூரிகளுக்கு சென்று பேச இருக்கிறேன். கல்லூரிக்குள் விடவில்லை என்றால் வெளியில் கூட்டம் நடத்துவேன். தடைகளை வென்று சரித்திரம் படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story