பொள்ளாச்சி அருகே பின்னிப்பிணைந்து விளையாடிய சாரைப்பாம்புகள்
பொள்ளாச்சி அருகே பின்னிப்பிணைந்தவாறு இரண்டு சாரைப்பாம்புகள் விளையாடின. அவற்றை 2 மணிநேரம் காத்திருந்து வனத்துறையினர் பிடித்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே கொங்கன்புதூரில் தனியார் தோட்டத்து சாலையில் 2 சாரைப்பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடி கொண்டிருந்தன. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வனச்சரகர் காசிலிங்கம் உத்தரவின் பேரில் வனவர் பிரபாகரன் மேற்பார்வையில் வேட்டை தடுப்பு காவலர்கள் காளிதாஸ், முத்து ஆகியோர் சாரை பாம்புகளை பிடிக்க சென்றனர். ஆனால் அந்த பாம்புகளை உடனே பிடிக்க வில்லை. சுமார் 2 மணி நேரம் பொறுமையாக காத்திருந்த பின்னரே அந்த பாம்புகளை பிடித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சாரைப்பாம்புகள் அடிக்கடி கூடல் விளையாட்டினை மேற்கொள்ளும். பொதுமக்களின் தொந்தரவு இல்லை என்றால் கலைந்து சென்று விடும். தற்போது பிடிப்பட்ட பாம்புகளின் நீளம் ஒவ்வொன்றும் தலா 7 அடி இருக்கும். பொதுவாக பின்னி பிணைந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது சாரை பாம்புகளை பிடிக்க முடியாது. அப்போது அவைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால் பொறுமையாக காத்திருந்து விளையாடி விட்டு பாம்புகள் பிரிந்து செல்லும் நேரம் பார்த்து அவற்றை பத்திரமாக பிடித்துவிட்டாம். பிடிபட்ட பாம்புகளை ஆழியாறு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டுவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.