சத்துணவு அமைப்பாளர் கத்தியால் குத்திக்கொலை
திருச்சி அருகே சத்துணவு அமைப்பாளரை கத்தியால் குத்தி கொன்ற கொழுந்தனாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி நெ.1 டோல்கேட்டை அடுத்துள்ள தாளக்குடி காலனி வடக்குத்தெருவை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 45). இவர் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜலெட்சுமி (35). இவர் மேலவாளாடி அருகே உள்ள புதுக்குடி பாலர் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அன்புராஜ் வீட்டின் மாடிப்பகுதியிலும், அவரது தம்பி பாலச்சந்தர் கீழ் தளத்திலும் வசித்தனர். பாலச்சந்தருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது மனைவி நீலவேணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
பாலச்சந்தர் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைத்த பணத்தில் குடித்து விட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்து வந்தார். இதுதொடர்பாக அன்புராஜூக்கும், பாலச்சந்தருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பாலச்சந்தர் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து தாய் சரோஜாவிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், பாலச்சந்தர் வாங்கிய கடனுக்காக அவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முயன்றார். இதனால் பாலச்சந்தருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
உடனே பாலச்சந்தரை அவரது தாய் சரோஜா வீட்டுக்குள் அடைத்து கதவை வெளியே பூட்டிவிட்டார். இதையடுத்து அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் அன்புராஜின் மனைவி ராஜலெட்சுமி மாடியில் இருந்து இறங்கி வந்து தெருவில் உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது சரோஜா, பூட்டிய கதவை திறந்து விட்டார். வீட்டினுள் இருந்து வெளியே வந்த பாலச்சந்தர், தெருவில் தனது அண்ணி ராஜலெட்சுமி நின்று பேசி கொண்டு இருந்ததை கண்டு தன்னிடம் தகராறு செய்த வாலிபரை ராஜலெட்சுமி தட்டி கேட்கவில்லை என்ற கோபத்தில் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே பாலச்சந்தர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து அன்புராஜ் கொடுத்த புகாரின் பேரில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலச்சந்தரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story