ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.¼ லட்சம் திருட்டு; வாலிபர் கைது


ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.¼ லட்சம் திருட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2018 3:00 AM IST (Updated: 20 Sept 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1. லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் ஏ.டி.எம்.-ல் கொள்ளை முயற்சி நடந்தது.

திருச்சி, 

திருச்சி ஆனந்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் வடிவேல்(வயது 55). இவர் நேற்று முன்தினம் பகலில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கைப்பையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்தார்.

பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம ஆசாமி ஒருவன், வடிவேல் கையில் வைத்திருந்த பணப்பையை கண்காணித்தபடியே இருந்தார். திருச்சி காந்திமார்க்கெட் பிரபாத் ரவுண்டானா துர்க்கையம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம ஆசாமி, வடிவேல் வைத்திருந்த பணப் பையை நைசாக திருடி விட்டு பஸ்சில் இருந்து தப்பி ஓட முயன்றான்.

இதைகண்ட வடிவேல் சக பயணிகள் உதவியுடன் கையும் களவுமாக அவனை பிடித்தார். பின்னர் அவன், காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி அந்த நபரை கைது செய்து, அவனிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டார். கைதானவர் மணிகண்டன்(வயது21). இவர் திருச்சி பாலக்கரை கீழபுதூர் ரோடு குருவிக்கார தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஆவார்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் பாலாஜி(30). நேற்று முன்தினம் வங்கி முன்புள்ள ஏ.டி.எம். மைய எந்திரத்தில் மேலாளர் பாலாஜி சக ஊழியர்களுடன் பணத்தை நிரப்பினார். அன்று இரவு ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன், கத்தியால் எந்திரத்தை நெம்பி பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சுமார் 15 நிமிடநேரம் முயற்சித்தும் எந்திரத்தை உடைக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டான்.

இந்த கொள்ளை முயற்சியானது ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த பதிவுடன் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் கனரா வங்கி மேலாளர் பாலாஜி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவை ஆராய்ந்து திருட்டு ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story