ஓய்வூதியம் பெற்றுத்தருவதாக 2 முதியவர்களிடம் ரூ.8 ஆயிரம் மோசடி
ஓய்வூதியம் பெற்றுத்தருவதாக 2 முதியவர்களிடம் ரூ.8 ஆயிரம் மோசடி செய்த அ.ம.மு.க. நிர்வாகி எனக்கூறியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி உறையூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் ரிச்சர்டு(வயது64). இவரது நண்பர் ஜார்ஜ்(63). கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி உறையூர் மார்க்கெட் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு உறையூர் மின்னப்பன் நகரை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வந்தார். அவர், தான் டி.டி.வி.தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியாக இருப்பதாக 2 முதியவர்களிடமும் அறிமுகம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்களிடம், தனக்கு தெரிந்த அரசு அதிகாரிகளிடம் சொல்லி இருவருக்கும் முதியோர் ஓய்வூதியம் பெற்றுத்தருவதாகவும், அதற்காக குறிப்பிட்ட தொகையை முன்பணமாக தனக்கு தரவேண்டும் என ஆர்வத்துடன் பேசுவதுபோல கூறியுள்ளார்.
அதை உண்மையென நம்பிய ரிச்சர்டு மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரும் தலா ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 ஆயிரம் ராஜபாண்டியனிடம் கொடுத்துள்ளனர். நாட்கள்தான் கடந்தனவே தவிர, இருவருக்கும் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை பெற்றுத்தருவதற்கான எவ்வித முயற்சியிலும் ராஜபாண்டியன் ஈடுபடவில்லையாம். பின்னர் இருவரும் சென்று தாங்கள் கொடுத்த பணத்தையாவது கொடு என்று கேட்டும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததுடன் முதியவர்கள் இருவருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசில் ரிச்சர்டு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மோசடியில் ஈடுபட்ட ராஜபாண்டியன் என்பவர் டி.டி.வி.தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் எவ்வித பொறுப்பிலும் இல்லை என்பதும், முதியவர்கள் இருவரிடமும் தான் அரசியல் கட்சியில் இருப்பதாக கூறி ஏமாற்றி ரூ.8 ஆயிரத்தை மோசடியாக பறித்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ராஜபாண்டியனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Related Tags :
Next Story