ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் கடைசியாக செல்போனில் பேசிய பெண்ணிடம் போலீசார் விசாரணை


ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் கடைசியாக செல்போனில் பேசிய பெண்ணிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Sept 2018 3:30 AM IST (Updated: 20 Sept 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கே.கே.நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டார். கடைசியாக செல்போனில் பேசிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடத்தல் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கே.கே.நகர்,


திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் தனபால்(வயது 58). இவர் ஆரம்பத்தில் வீடு வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு பிடித்து கொடுக்கும் புரோக்கராகவும், நிலங்களை கமிஷன் அடிப்படையில் விற்பனைக்கு ஆட்களை பிடித்து கொடுக்கும் நிலத்தரகராகவும் தொழில் செய்து வந்தார். நாளடைவில் ரியல் எஸ்டேட் அதிபராகி கோடீஸ்வரராக உயர்ந்தார்.

திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொந்தமாக வணிக நிறுவன கட்டிடங்களும், வீடுகளையும் கட்டி அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. தினமும் வீட்டில் இருந்து தனபால், வெளியில் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு இரவு 10 மணிக்குள் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அதைத்தொடர்ந்து அவரது செல்போனுக்கு அவரது தம்பி மணி மற்றும் உறவினர்கள் தொடர்பு கொண்டபோது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

தனபால், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாகவும், தொழிலில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த பிரச்சினை காரணமாக யாரேனும் தனபாலை கடத்தி சென் றிருக்கலாம் என கருதப் படுகிறது.
இது தொடர்பாக தன பாலின் சகோதரர் மணி, திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து அவரை தேடும் படலத்தை தொடங்கினார். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

தனபால் வழக்கமாக தினமும் திருச்சி டோல்கேட் அருகே ஒரு ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நண்பர்கள் மற்றும் சிலரை சந்தித்து விட்டு பின்னர் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் முதல் கட்டமாக குறிப்பிட்ட ஓட்டல் முன்பு வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு தனபால் மோட்டார் சைக்கிளில் வருவது போலவும், ஓட்டல் அருகே அதை நிறுத்தி விட்டு இரவு 9 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளை எடுத்து செல்வது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பின்னரே அவர் வீடு திரும்பவில்லை என்பதும், செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. எனவே, அவர் கடத்தப்பட்டது போலீசாரால் உறுதிப் படுத்தப்பட்டது.
மேலும் தனபாலுடன் நெருங்கி பழகியவர்கள் குறித்தும், யாரிடமெல்லாம் பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர்பில் உள்ளார்? என்றும் தொழில் போட்டி ஏதேனும் உள்ளதா? என்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அத்துடன் ரியல் எஸ்டேட் அதிபர் தனபால் செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் இரவு யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசினார்கள் எனவும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கடைசியாக திருச்சி ஏர்போர்ட் பகுதி காமராஜ் நகரில் இருந்து ஒரு பெண் இரவு 8.45 மணிக்கு தொடர்பு கொண்டு பேசியதை போலீசார் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு பிறகே தனபால் மோட்டார் சைக்கிளில் ஓட்டல் அருகே இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த அப்பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பெண், தனபால் கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சந்தேகம் உள்ளதால் அப்பெண்ணை போலீசார் தங்களது கண்காணிப்பில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஏன்? எதற்காக கடத்தப்பட்டார் என்ற முழுமையான விவரம் தெரியவில்லை. மேலும் கடத்தல் ஆசாமிகள் பணம் கேட்டும் இதுவரை அவரது குடும்பத்தினருக்கு மிரட்டலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, தனபால் கடத்தல் சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

திருச்சி கே.கே.நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து இந்தியன் வங்கி காலனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story