அவினாசி–சேவூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
அவினாசி–சேவூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அவினாசி,
அவினாசி வடக்கு ஒன்றியத்தில் சேவூர், முறியாண்டம்பாளையம், பாப்பாங்குளம், நடுவச்சேரி, சின்னேரிபாளையம், போத்தம்பாளையம், புலிப்பார், குட்டகம், தத்தனூர், பொங்கலூர் உள்பட 15–க்கும் மேற்பட்ட ஊராட்சியில் பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ–மாணவிகள், கட்டிட தொழிலாளர்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள், விசைத்தறி, ஒர்க்ஷாப் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலைக்கு செல்ல தினமும் இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் அவினாசி மற்றும் திருப்பூர், புதிய திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு அவினாசி வழியாக சென்று வருகின்றனர்.
இதுதவிர வடக்கு ஒன்றியத்திலிருந்த 100–க்கும் மேற்பட்ட வேன்கள், மினி பஸ்கள் திருப்பூர் மற்றும் புதிய திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு வேலைஆட்களை ஏற்றி செல்கின்றன. இவ்வாறு அவினாசி வடக்கு ஒன்றியத்திற்கு பல ஊர்களில் இருந்து வரும் மோட்டார்சைக்கிள்கள் முதல் அனைத்து கனரக வாகனங்களும் மற்றும் புளியம்பட்டி, கோபி, சத்தி, நம்பியூர், மைசூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் அவினாசி சேவூர் ரோடு மடத்துப்பாளையம் ரோட்டின் சந்திப்பு வழியாகத்தான் செல்லவேண்டும்.
அவினாசி மடத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளன. காலை 7.30 மணியில் இருந்து 10 மணி வரையிலும் மாலை 4.30 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மடத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் உள்ள 4 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த இடத்தில் வேகத்தடை ஏதும் இல்லாததால் வடக்கு பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் அசுர வேகத்தில் வருகின்றன.
இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. அந்த நால்ரோடு சந்திப்பில் நடந்து செல்பவர்களும், பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அவினாசி மடத்துப்பாளையம் ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைத்து சேவூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.