நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்


நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:28 AM IST (Updated: 20 Sept 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூர் புதிய அனல்மின்நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையமும், 840 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல்மின்நிலையமும் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 மற்றும் 3-வது யூனிட்டுகளில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த யூனிட்டுகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் பழைய அனல்மின்நிலையத்தில் கடந்த 2 நாட்களாக 420 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக புதிய அனல் மின்நிலையத்தின் இயக்கம் நேற்று மாலை முதல் அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இதில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 அனல் மின்நிலையத்திற்கும் சேர்த்து நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரி ஒடிசாவில் இருந்து ரெயில் வேகன்கள் மூலம் எடுத்து வரப்படும். தற்போது ஒடிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே மேட்டூர் அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை தற்காலிகமாக பெற மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள வேறு ஒரு அரசு நிறுவனத்துக்கு ரெயில் வேகன்களில் வரும் நிலக்கரியை மேட்டூருக்கு எடுத்து வர அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். அந்த நிலக்கரி வந்த உடன் மேட்டூர் புதிய அனல்மின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story