பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்


பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 19 Sep 2018 11:12 PM GMT (Updated: 19 Sep 2018 11:12 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

திருவொற்றியூர்,

தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சென்னை ராயபுரத்தில் உள்ள 3 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு கணினி குறித்து அடிப்படை பயிற்சி அளிக்கும் முயற்சியை மேற்கொள்ள உள்ளது.

அதன் முதல் கட்டமாக நேற்று ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கணினி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, கணினி பயிற்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:–

மாணவர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும் என்ற அடிப்படையில் இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்று பயன்பெற உள்ளனர். தமிழக அரசு 2 தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பயிற்சியை அளிக்க உள்ளது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை வாங்கித்தரவேண்டும். ஏற்கனவே 14–வது நிதிநிலை அறிக்கையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

1971–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வரிவருவாய் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் தருவதாக கூறினார்களே தவிர பணம் வரவில்லை.

மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்ததை ஏற்று, சரியான முறையில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்காக ரூ.6 ஆயிரம் கோடி வருவாய்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்திற்கான இந்த ரூ.23 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் இருந்து வாங்கிக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. ஆனால் தமிழிசை சவுந்தரராஜன், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திற்கான நிதியை வாங்கித்தர தயாரா?

மத்திய தொகுப்பிற்காக தமிழகத்தில் இருந்து வரி வருவாய் நேரடியாக அதிக அளவில் செலுத்தப்படுகிறது. ஆனால் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும்போது வரி வருவாய் குறைவாக கிடைக்கிறது. மக்கள் குறைகளை தீர்க்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறதே தவிர பணம் இல்லை.

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்யவேண்டும். ஜி.எஸ்.டி.யை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை மிகப்பிரதானமாக இருப்பதால் 30 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வரி வருவாய் வருகிறது.

ஆனால் இதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதால் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யாமல் எண்ணெய் நிறுவனங்கள் டாலர் பண மதிப்புக்கு ஏற்றவாறு தாங்களாகவே விலையை ஏற்றக்கூடாது. இதற்கு மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்.

பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் பண்பாடு இல்லாமல் பேசுவது அவரது பேச்சில் தெரிகின்றது. எவ்வளவு கத்தினாலும் தி.மு.க. ஒரு போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. மக்களுக்கு சந்தர்ப்பவாதி யார்? என்று தெரியும். எந்நேரமும் நிறம் மாறாத அரசாக அ.தி.மு.க உள்ளது.

எச்.ராஜா விவகாரத்தில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிந்து உள்ளது. இருந்தாலும் தமிழக அரசு அவர் மீது பல்வேறு பிரிவுகளில் ஜாமீனில் வெளிவராதபடி வழக்கு போட்டுள்ளது.

அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம். வழிப்போக்கர் போல சம்பந்தமில்லாமல் டி.டி.வி. தினகரன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நம்பிக்கை கூறுவது ஏற்புடையதல்ல. திரைப்படக்காட்சிகளில் கூட்டத்தில் நின்று முகம்கூட தெரியாதவன், படத்தின் ஹீரோ நான்தான் என்று கூறுவது போல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story