மத்திய சேமிப்புக் கிடங்கில் மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கும் முறை: நிர்வாக இயக்குனர் தொடங்கி வைத்தார்
மத்திய சேமிப்பு கிடங்கின் புதுச்சேரி கிளையில் மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கும் முறையை அதன் நிர்வாக இயக்குனர் அருண்குமார் ஸ்ரீ வத்சவா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி வாணரப்பேட்டையில் மத்திய அரசின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு பாப்ஸ்கோ உள்ளிட்ட மாநில அரசின் நிறுவனங்களின் பொருட்கள், தனியார் தொழிற்சாலைகளின் கச்சாப்பொருட்கள், தனியார் வியாபாரிகளின் பொருட்கள் மற்றும் விவசாயிகளின் விளை பொருட்கள் வாடகை கட்டணம் அடிப்படையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தேவைப்படும் போது அந்த பொருட்களை அங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம். இங்கு வைக்கப்படும் பொருட்களுக்கு விவசாயிகளுக்கு 30 சதவீதமும், கூட்டுறவு அமைப்புகளுக்கு 10 சதவீதமும் வாடகையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இங்கு வைக்கும் பொருட்களுக்கு இதுவரை கையால் எழுதப்பட்ட ரசீதுகளே வழங்கப்பட்டு வந்தது. கையால் எழுதப்பட்ட ரசீதுகளில் தவறுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்பதால் இவைகளைக் கொண்டு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தர மறுத்து வந்தன. எனவே நாடு முழுவதும் மத்திய அரசின் சேமிப்புக்கிடங்குகளில் மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கில் மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு சேமிப்புக்கிடங்கின் நிர்வாக இயக்குனர் அருண்குமார் ஸ்ரீ வத்சவா தலைமை தாங்கி மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கும் முறையை தொடங்கி வைத்தார். அப்போது மத்திய சேமிப்பு கிடங்கில் பொருட்கள் வைத்துள்ள ஒருவருக்கு மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கினார்.
நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் சங்கர், தேசிய என்.இ.ஆர்.எல். நிறுவன மேலாண் இயக்குனர் கேதார் தேஷ்பாண்டே, புதுச்சேரி வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி, புதுச்சேரி கிடங்கு மேலாளர் சஞ்சீவி, கண்காணிப்பாளர் சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மத்திய சேமிப்பு கிடங்கின் புதுச்சேரி கிளை மேலாளர் சஞ்சீவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய உணவு அமைச்சகத்தின் கீழ் இந்த சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. நாடு முழுக்க 432 சேமிப்புக்கிடங்குகள் உள்ளன. இதில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல், கோதுமை, கம்பு போன்ற அழுகாத பொருட்களை பாதுகாப்பாக குறைந்த வாடகையில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம். தற்போது ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டியிருக்கும் அரிசியை பாப்ஸ்கோ நிறுவனம் பாதுகாப்பாக வைத்து எடுத்து வழங்கி வருகிறது. அரசின் பிற நிறுவனங்களும் தங்களது பொருட்களை இங்கு வைத்துக்கொள்ளலாம். தனியார் தொழிற்சாலைகளும், வியாபாரிகளும்கூட இங்கு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
முன்பு இங்கு வைக்கப்படும் பொருட்களுக்கு கையால் எழுதி ரசீது தரப்படும். அதில் தவறுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது என்பதால் அதனை ஆதாரமாக கொண்டு வங்கிகள் கடன் தர மறுத்தன. இதனால் தற்போது மின்னணு சேவை மூலம் ரசீது வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதைக்கொண்டு இங்கு பொருட்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.