அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sept 2018 5:45 AM IST (Updated: 20 Sept 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பிரதிமாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அங்கு 12 ஆண்டுகாலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

நிலுவை சம்பளம், பணிநிரந்தரம்கோரி அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போராட்டத்துக்கு தள்ளிய அரசு அவர்களை அலைக்கழித்து வருவதை புதுவை மாநில தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. கல்விக்கேந்திரமாக விளங்கிய புதுச்சேரி மாநிலம் தற்போது தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் தேர்ச்சி விகிதத்தில் அரசு பள்ளிகள் பின்தங்கி உள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் சுமார் 600 நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும், 244 பேர் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகாலமை£க அரசு சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்காமல் உள்ளது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கல்வி உரிமை சட்டத்தின்படி அரசு பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு என்னென்ன சலுகைகள், உரிமைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கும் வழங்கவேண்டும்.

அரசு நிதியுதவி பெறும் 600 நிரந்தர ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காமல் இருப்பதுடன் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தி ஓராண்டாகியும் அவர்களுக்கு அதனை வழங்காமல் அரசு அலைக்கழித்து வருகிறது. இதனால் குடும்ப செலவு, மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்விக்கட்டணம் ஆகிய அத்தியாவசிய செலவுகளுக்கு அல்லல்படும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 244 பேரை பணிநிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தும் அவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் அலைக்கழித்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கருணாநிதி ஆட்சியில் 100 சதவீதம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் புதுச்சேரியிலும் 100 சதவீதம் நிதியுதவி வழங்கி அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story