திருமருகல் அருகே வளப்பாற்றில் தண்ணீர் விடக்கோரி 6 கிராம விவசாயிகள் சாலை மறியல்


திருமருகல் அருகே வளப்பாற்றில் தண்ணீர் விடக்கோரி 6 கிராம விவசாயிகள் சாலை மறியல்
x

திருமருகல் அருகே வளப்பாற்றில் தண்ணீர் விடக்கோரி 6 கிராம விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தில் உள்ள வளப்பாறு மூலம் 6 கிராமங்கள் பாசனம் பெற்று 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். தற்போது இப்பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி பல இடங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இந்தநிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இப்பகுதி வளப்பாற்றில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விதைப்பு செய்த வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு முளைத்து வந்துள்ள பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வேதனையடைந்த விற்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி, வீரபெருமாநல்லூர், பில்லாளி, காரையூர் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வளப்பாற்றில் உடனே தண்ணீர் விடக்கோரி கங்களாஞ்சேரி பாலம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நாகை தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், வளப்பாற்றில் தண்ணீர் விடும்வரை நாங்கள் போராட்டம் செய்வோம் என கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story