ஆலங்குடியில் 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையுடன் சமுதாய வளைகாப்பு விழா


ஆலங்குடியில் 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையுடன் சமுதாய வளைகாப்பு விழா
x
தினத்தந்தி 20 Sept 2018 7:01 AM IST (Updated: 20 Sept 2018 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில் சீர்வரிசையுடன் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மேலும் 5 வகையான உணவுகளும் வழங்கப்பட்டது.

ஆலங்குடி,

திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக வழங்க புடவை, வளையல், மஞ்சள்- குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் தாம்பூலத் தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி (பொறுப்பு) ராணி தலைமை தாங்கி, வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வாழ்த்து கூறினார்.

பின்னர் வழக்கமாக வளைகாப்பு விழாக்களில் நடத்தப்படும் சம்பிரதாய சடங்குகள் அந்த கர்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டு, குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கரைப்பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம் என 5 வகையான உணவுகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர்கள், ராஜப்பன், ஹர்சவர்தன், கீதா ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை மற்றும் மாத்திரைகளை வழங்கினர். இதில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் வின்சென்ட், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story