வடக்குபாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கரூர் அருகே வடக்கு பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,
கரூர் காந்திகிராமம் அருகே வடக்குபாளையம் பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் அங்கு ஏற்கனவே குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகளும் சேதமடைந்துள்ளன. மின்மோட்டார் பழுதடைந்துள்ளதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வடக்குபாளையம் பகுதி மக்கள் குடிநீருக்காக வீரராக்கியம், காந்திகிராமம் உள்ளிட்ட இடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். சிலர் பணம் கொடுத்து லாரி தண்ணீர் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்கள் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய கிணறு உள்ளிட்டவற்றிலிருந்து நீர் எடுத்து வருவதால் அவதிக்குள்ளாகின்றனர்.
சீராக குடிநீா வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை வடக்குபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி மெயின்ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவிரி, அமராவதி ஆறுகளில் சமீபத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுவது ஏன்? என கேள்வி எழுப்பி தாகம் தீர்க்க குடிநீர் வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்குபாளையம் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story