நெல்லை கோர்ட்டு வளாகத்தில் வழக்கு விவரங்களை அறிய தொடுதிரை எந்திரம் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்


நெல்லை கோர்ட்டு வளாகத்தில் வழக்கு விவரங்களை அறிய தொடுதிரை எந்திரம் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:00 PM GMT (Updated: 20 Sep 2018 12:15 PM GMT)

நெல்லை கோர்ட்டு வளாகத்தில், வழக்கு விவரங்களை அறியக்கூடிய தொடுதிரை எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை கோர்ட்டு வளாகத்தில், வழக்கு விவரங்களை அறியக்கூடிய தொடுதிரை எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் திறந்து வைத்தார்.

தொடுதிரை எந்திரம்

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடக்கின்ற வழக்கு விவரங்கள், விசாரணை தேதி, வாய்தா, வழக்கின் நிலை, தீர்ப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் அறியும் வண்ணம் தொடுதிரை எந்திரம் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, அந்த எந்திரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

50 ஆயிரம் வழக்குகள்

மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு பிறகு நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தான் தொடுதிரை எந்திரம் தொடங்கப்பட்டு உள்ளது. நெல்லை கோர்ட்டில் உள்ள அனைத்து வழக்கு விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். வழக்கு எண்ணை குறிப்பிடும்போது வழக்கு விவரங்கள், வாய்தா விவரம், எதிரிகள் விவரம், விசாரணை தேதி ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். இது வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொடுதிரை எந்திரம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற கோர்ட்டுகளிலும் அமைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை கோர்ட்டு வளாகத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் அருள்முருகன், ஜெயராஜ், தாகூர், ராஜமாணிக்கம், ஹேமானந்தகுமார், ரஜினி, கெங்கராஜ், ராமதாஸ், கார்த்திகேயன், மாலதி, அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, வக்கீல் சங்க தலைவர் சிவசூர்யநாராயணன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மாரியப்ப காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story