கழுகுமலையில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் குடிநீர் வினியோகம் சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு
கழுகுமலை நகர பஞ்சாயத்து பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்வது என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கழுகுமலை நகர பஞ்சாயத்து பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்வது என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தைகழுகுமலை நகர பஞ்சாயத்து பகுதியில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கழுகுமலை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கழுகுமலை நகர பஞ்சாயத்து அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர்.
இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று காலையில் நடந்தது. தாசில்தார் பரமசிவன் தலைமை தாங்கினார். கழுகுமலை நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அழகர்சாமி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் தினகரன், அ.ம.மு.க. நகர செயலாளர் கோபி, கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்தையா, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுழற்சி முறையில்...கூட்டத்தில் கழுகுமலை நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கு வருகிற 10–ந்தேதிக்குள் 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கழுகுமலை குமரேசன் நகரில் உள்ள பழுதடைந்த பாலம் வருகிற 30–ந்தேதிக்குள் சீரமைக்கப்படும்.
கழுகுமலை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அனைவரும் ஏற்று கொண்டு, கலைந்து சென்றனர்.