எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் வருகை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் வருகை
x
தினத்தந்தி 20 Sep 2018 11:30 PM GMT (Updated: 20 Sep 2018 6:04 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நாகர்கோவில் வருகிறார். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசுகிறார்.

விழாவை சிறப்பாக குமரி மாவட்ட நிர்வாகமும், அ.தி.மு.க.வினரும் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். விழாவையொட்டி நாகர்கோவில் நகரம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அமைத்து வரும் விளம்பர பதாகைகள், பேனர்கள், கொடி- தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் போன்றவற்றால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.

முன்னதாக நேற்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மதுரை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.

விழா பந்தல் மற்றும் மேடைப்பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சூப்பிரண்டு ஸ்ரீநாத்துடன், ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆலோசனை செய்தார். பின்னர் அவர் முதல்-அமைச்சர் விழா மேடைக்கு காரில் வரும் பகுதி, அவர் வந்து செல்லும் சாலைகள், தங்குமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

விழா மேடை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழா பந்தலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தையும் ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவி மூலம் போலீசார் சோதனை செய்தபிறகே அனுமதிக்கிறார்கள்.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காவல்கிணறு சந்திப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம், ஒழுகினசேரி வழியாக மாலை 4 மணிக்கு நாகர்கோவில் வருகிறார். அன்று இரவு அவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, குமரி- நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பிலும், ஆரல்வாய்மொழி, தோவாளை, நாகர்கோவிலிலும் அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. குமரி மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண்தங்கம் (மேற்கு) மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டியும் நாகர்கோவில் நகரம் மட்டுமின்றி அவர் வந்து செல்லும் பகுதிகள் அனைத்திலும் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த விழா பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story