கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர், 


காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது 48), சேலை வியாபாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (42). சேகர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் இரவு சத்துவாச்சாரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் கணவன்-மனைவியும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்களை ‘ஹெல்மெட்’ அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் சென்றபோது சேகரின் மோட்டார் சைக்கிளை முந்தி செல்வதுபோன்று மர்ம நபர்கள் வேகமாக வந்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் திடீரென தனலட்சுமி அணிந்திருந்த தாலிசரடு, தங்கசங்கிலி ஆகியவற்றை பறிக்க முயன்றார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி தாலிசரடை இறுக்கமாக பிடித்து கொண்டார். அதனால் 3 பவுன் தங்க சங்கிலி மட்டும் ‘ஹெல்மெட்’ கொள்ளையன் கையில் சிக்கியது. அதனை பறித்துவிட்டு ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று தப்பினார்கள்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன்-மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பெண்ணிடம் தங்கசங்கிலியை பறித்து தப்பிச்சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சத்துவாச்சாரியில் கடந்த 16-ந் தேதி நடந்த கோவில் திருவிழாவில் மூதாட்டியின் 3 பவுன் தங்கசங்கிலியை பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்துவாச்சாரியில் மீண்டும் தங்கசங்கிலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இத்தகைய தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story