குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை


குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2018 10:15 PM GMT (Updated: 20 Sep 2018 7:33 PM GMT)

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம்,

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ கருவி அமைத்து 6 மாதங்கள் ஆகியும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக அதை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தினமும் 1,500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்துசெல்கின்றனர். உள்நோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுநீரக கோளாறு ஏற்பட்டவர்கள் ரத்தம் சுத்திகரிப்புக்கான ‘டயாலிசிஸ்’ செய்யவேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்லவேண்டியது உள்ளது. அங்கு அவர்கள், பணத்தை செலவு செய்தால்தான் ‘டயாலிசிஸ்’ செய்யமுடியும். இந்நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

எனவே சிறுநீரக கோளாறால் அவதிப்படும் ஏழை நோயாளிகளின் நலன் கருதி அவர்களுக்கு இலவசமாக ‘டயாலிசிஸ்’ செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் மூன்று ‘டயாலிசிஸ்’ கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி அமைக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்காக வருவோருக்கு அந்த சிகிச்சை செய்ய முடியாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தி வைக்க அமைச்சர் தேதி கொடுத்தார். திடீரென அது ரத்து செய்யப்பட்டது. தற்போது, ‘டயாலிசிஸ்’ எந்திரம் மூன்றும் அமைக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தும் அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் அமைச்சர், அதிகாரிகளின் தேதிகளுக்காக காத்திருக்கிறது.

காட்சி பொருளாக இருக்கும் ‘டயாலிசிஸ்’ கருவிகளை பொதுமக்கள் நலன் கருதி, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறியதாவது:-

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு பாதிப்பு உள்ள ஏழைநோயாளிகள் ‘டயாலிசிஸ்’ செய்துகொள்ள வசதியாக 3 ‘டயாலிசிஸ்’ எந்திரங்கள் வந்து 6 மாதம் ஆகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த ஜூலை மாதம் கருவியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க தேதி கொடுத்தார். ஆனால் அவர் வரவில்லை.

‘டயாலிசிஸ்’ கருவியில் ரத்த சுத்திகரிப்பு செய்யும்போது பயன்படுத்தவேண்டிய கிருமி நீக்கி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்துவது குறித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 2 பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. இன்னும் ஒரு பரிசோதனை முடிவு வரவேண்டியது உள்ளது.

‘டயாலிசிஸ்’ கருவியை பயன்படுத்துவது குறித்து 2 டாக்டர்கள், 2 பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு தயாராக உள்ளனர். அரசு எப்போது அந்த கருவிகளை செயல்படுத்தவேண்டும் என சொல்கிறதோ அப்போதே அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story