அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுவை அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அங்கு 12 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. நிலுவை சம்பளம், பணிநிரந்தரம் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போராட்டத்துக்கு தள்ளிய அரசு, அவர்களை அலைக்கழித்து வருவதை புதுவை மாநில தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. கல்விக்கேந்திரமாக விளங்கிய புதுச்சேரி மாநிலம் தற்போது தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் தேர்ச்சி விகிதத்தில் அரசு பள்ளிகள் பின்தங்கி உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் சுமார் 600 பேர் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும், 244 பேர் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தின்படி அரசு சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்.
இதுமட்டுமில்லாமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 244 பேரை பணிநிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காதது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் 100 சதவீதம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதுபோல் புதுச்சேரியிலும் நிதியுதவி வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story