போலீஸ் நிலையம் முன்பு வக்கீல் நந்தினி தந்தையுடன் தர்ணா


போலீஸ் நிலையம் முன்பு வக்கீல் நந்தினி தந்தையுடன் தர்ணா
x
தினத்தந்தி 21 Sept 2018 3:30 AM IST (Updated: 21 Sept 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வக்கீல் நந்தினியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 


மதுரையை சேர்ந்த வக்கீல் நந்தினி(வயது 25), அவரது தந்தை ஆனந்தன்(53) ஆகியோர் நேற்று விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள மணிக்கூண்டு அருகே மதுவுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடி வீட்டுக்கு கேடு, மோடி நாட்டுக்கு கேடு என்ற பேனரையும் வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்து நந்தினியுடனும், அவரது தந்தை ஆனந்தனிடமும் ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீசார் அனுமதியில்லாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரும் நேற்று இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வக்கீல் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக எங்களை கைது செய்த போலீசார், எங்களுடன் தகராறில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். நேற்று முன்தினம் காரைக்குடியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எங்களுடன் தகராறு செய்த பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராக இல்லை. நாளையும்(இன்றும்) நாங்கள் வேறொரு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தால் இதே போன்றுதான் போலீசார் நடந்து கொள்வார்கள். எனவே எங்கள் மீது ஏதாவது ஒரு வழக்கை பதிவு செய்து ஜெயிலில் அடைத்துவிடுங்கள் என தந்தையும் மகளும் போலீசாரிடம் கூறினர்.

மேலும் அவர்கள் கூறும்போது, மத்திய அரசு சொல்வதைத்தான் மாநில அரசு கேட்கிறது. மாநில அரசு சொல்கிற படி போலீசார் நடந்து கொள்கின்றனர். மத்திய-மாநில அரசுகள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்துவதற்கு கூட அனுமதிப்பதில்லை. பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் கூறுவதைத்தான் மாநில அரசு கேட்கிறது. நீதிமன்றம் மதுக்கடைகளை மூடச்சொன்னவுடன் மதுக்கடைகளை மூடிய தமிழக அரசு, தற்போது பல குறுக்கு வழிகளை கையாண்டு மீண்டும் மதுக்கடைகளை திறந்து விட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றும், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்றும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூறினார்கள். அவர்கள் இருவரும் தற்போது இல்லை. அவர்களது வாக்குறுதியை நிறைவேற்ற யாரும் தயாராக இல்லை. நாங்கள் மதுவை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

இதனை தொடர்ந்து மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். முடிவில் அவர்கள் இருவரும் தங்களது பேனரை திருப்பித்தருமாறு வலியுறுத்தினர். பேனரை போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story