கல்வி இணை இயக்குனர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள்


கல்வி இணை இயக்குனர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள்
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 10:51 PM GMT)

அருப்புக்கோட்டை கல்லூரிக்கு விசாரணைக்காக சென்ற கல்வி இணை இயக்குனர் முன்னிலையிலேயே கல்லூரி நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது காரை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் தனியார் கலைக்கல்லூரி உள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலாதேவி பணியாற்றிய இக்கல்லூரியில், சுயநிதி பிரிவில் வேலை செய்யும் தற்காலிக பணியாளர்களான தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, சுகஸ்தலா ஆகியோர் பணி நிரந்தரம் செய்யக்கோரி கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் நேற்று முன்தினம் அவர்கள் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தனலட்சுமி உள்பட 4 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தனர். மேலும் கல்லூரியில் அடிக்கடி நடக்கும் பிரச்சினைகளால் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரியில் நடந்த பணி நிரந்தரம் விஷயத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை செய்வதற்காக மதுரையில் இருந்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அம்பலவாணன் மற்றும் அதிகாரிகள் நேற்று வந்தனர். நுழைவு வாயில் அருகே அந்த குழு வந்தவுடன், தற்கொலை மிரட்டல் விடுத்த தனலட்சுமி உள்ளிட்டோர், இணை இயக்குனர் காலில் விழுந்து எங்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றனர். பின்னர் அந்த அதிகாரிகள் குழு, முதல்வர் அறைக்கு சென்று விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது கல்லூரி செயலாளர் ராமசாமி, முன்னாள் செயலாளர் சவுண்டையன் உள்பட 2 நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர். கல்வி இணை இயக்குனர், கல்லூரி முதல்வரிடம் அனைத்து நாளிதழ்களிலும் போராட்டம் குறித்த செய்திகள் வந்துள்ளன, ஏன் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் பிரச்சினையில் ஏன் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் நாங்கள் யாரும் மாணவர்களை போராட்டத்திற்கு அழைக்கவில்லை என கூறினார்.

அப்போது, அலுவலக பணியாளர் ஒருவர், முதல்வர் தான் மாணவர்களை வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்திற்கு வருமாறு அழைத்தாக புகார் கூறினார். இதனால் கல்லூரி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரகளையாக மாறியது. இதனால் விசாரணைக்கு வந்த அதிகாரிகள் குழு, செய்வதறியாது திகைத்தது. மேலும் மோதல் சம்பவம் ஏற்படாமல் இருக்க, முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் அறையை விட்டு வெளியேற்றினர். அதன்பின்னர் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வெளியே வந்து, இணை இயக்குனரின் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணைக்கு யாரும் ஒத்துழைக்காததால் விசாரணையை ஒத்தி வைத்து விட்டு வெளியே வந்த அதிகாரிகள் காரை எடுக்க முயன்றனர். ஆனால் காரை எடுக்கமுடியவில்லை. அவர்கள் வெளியே செல்வதற்கு முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப் படுகிறது. 

Next Story