ஆட்டோ மீது லாரி மோதல் : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
நாக்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
நாக்பூர்,
நாக்பூர் தாஜ்பாக் பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினர் முகரம் பண்டிகையை முன்னிட்டு தாபேவாடா பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்துக்கு நேற்று ஒரு ஆட்டோவில் சென்றனர்.
பிற்பகல் 3.30 மணி அளவில் அவர்களது ஆட்டோ கமலேஷ்வர்-நாக்பூர் சாலையில் உள்ள வரோரா கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. ஆட்டோவில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களது பெயர் பத்மா பேகம் (வயது 40), அஸ்மா பர்வின் (20), நசீன் (2), மகீம் மக்தூம் (3), பாஜூ சேக் (5) என்று தெரியவந்தது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.