பேட்டரி வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்ய 500 மையங்கள்
பேட்டரி வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்ய 500 மையங்களை மராட்டிய மின் வினியோக நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளது.
மும்பை,
பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்கள் விடும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மராட்டியத்தில் பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யும் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் மராட்டிய மின் வினியோக நிறுவனம் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில், 500 மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதில் முதல்கட்டமாக 50 மையங்கள் விரைவில் திறக்கப்படுகிறது. இதில் மும்பை, நவிமும்பை, பன்வெல் ஆகிய நகரங்களில் தலா 4 மையங்கள், தானேயில் 6 மையங்கள், புனே, நாக்பூரில் தலா 10 மையங்கள், மும்பை-புனே விரைவு சாலையில் 12 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளது.ஒட்டுமொத்தமாக 500 சார்ஜ் செய்யும் மையங்களும் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் அடுத்த 3 முதல் 4 வருடங்களில் அமைக்கப்பட உள்ளது. பேட்டரியில் இயங்கும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களுக்கு இங்கு மின்சாரம் சார்ஜ் செய்யப்படும்.
ஒரு வாகனத்திற்கு முழுமையாக சார்ஜ் செய்ய 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஆகும். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை மராட்டிய மின் வினியோக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story