தற்காலிக சீரமைப்பு பணியில் தொய்வு வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்


தற்காலிக சீரமைப்பு பணியில் தொய்வு வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
x
தினத்தந்தி 20 Sep 2018 11:40 PM GMT (Updated: 20 Sep 2018 11:40 PM GMT)

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாகிறது. ஆனால் சரியான திட்டம் இல்லாததால் தற்காலிக சீரமைப்பு பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டு உள்ளது. வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

ஜீயபுரம்,

வெள்ளப்பெருக்கின் காரணமாக திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் 22-ந்தேதி 9 மதகுகள் உடைந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உடைப்பு ஏற்பட்ட பகுதியை தற்காலிகமாக சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கியது.

இந்த பணிக்கு ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், தற்காலிக சீரமைப்பு பணி முடிவடைந்த பின்னர் தற்போது உடைப்பு ஏற்பட்ட அணையின் அருகிலேயே 100 மீட்டர் தூரத்தில் ரூ.410 கோடியில் புதிதாக கதவணை கட்டப்படும் என்றும் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீரின் ஆழம் மற்றும் வேகம் அதிகமாக இருப்பதால் தற்காலிக சீரமைப்பு பணியை முடிப்பது பெரும் சவாலாக அமைந்து உள்ளது. அணையில் உடைப்பு ஏற்பட்டு நாளையுடன் (22-ந்தேதி) ஒரு மாதம் ஆக போகிறது.

9 மதகுகள் உடைந்த பகுதியில் வீணாக வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்காக ஆற்றுக்குள் ராட்சத இரும்பு குழாய்கள் மற்றும் நீளமான சவுக்கு கம்பிகளை இறக்கியும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டகளை அடுக்கியும், லாரி லாரியாக பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்தும் கொட்டும்பணி நடந்து வருகிறது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் ஈடுபட்டு உள்ளனர். இவ்வளவு பணிகள் நடந்து வந்தாலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இன்னும் தண்ணீர் வீணாக வெளியேறி செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்காலிக சீரமைப்பு பணிகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான்கே நாட்களில் இந்த பணி முடிவடைந்து விடும் என்று குறிப்பிட்டார். ஆனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லையா? அல்லது சரியான திட்டமிடாததால் தற்காலிக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் பட்சத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதனை தாக்கு பிடிக்க முடியாமல் ஆற்றுக்குள் போடப்பட்டுள்ள மணல் மூட்டைகளும், பாறாங்கற்களும் தண்ணீரில் அடித்து செல்லப்படும் சூழ்நிலை ஏற்படும். அத்துடன் புதிய கதவணை கட்டும்பணியை தொடங்குவதிலும் கால தாமதம் ஏற்படலாம்.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பணி தொடங்கிய போது தினமும் முக்கொம்புக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். தற்போது ஒரு வார காலமாக அமைச்சர்கள் யாரும் முக்கொம்புக்கு வரவில்லை.

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சீரமைப்பு பணிகள் ஆய்வுக்கு வரவில்லை. பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது. இதுபோன்ற காரணங்களால் தற்காலிக சீரமைப்பு பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

Next Story