முதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா
முதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் எல்லை மீறி பேசுவதாக குமாரசாமி சொல்கிறார். எனது வரையறை என்ன என்பது எனக்கு தெரியும். எப்படி பேச வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி தான் அத்துமீறி பேசுகிறார். சிவராம் காரந்த் லே-அவுட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அதை விடுத்து மிரட்டும் போக்கில் ஈடுபட்டால் அது எடுபடாது. தேவேகவுடா குடும்பத்தினர் மைசூருவில் எத்தனை வீட்டுமனைகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அனைத்தையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். மந்திரி டி.கே.சிவக்குமார் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும், அவர் என்னை விமர்சித்து இருக்கிறார்.
தனது மனதில் உள்ள வேதனையில் அவர் ஏதேதோ பேசி இருக்கிறார். அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கும் பலம் அவருக்கு உள்ளது.இதை அவர் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது சரியல்ல. உங்களுக்கு(குமாரசமி) கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால் மத்தியில் எங்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு பதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். பணியவும் மாட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.