வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Sept 2018 5:36 AM IST (Updated: 21 Sept 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்பதால் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் தேங்கி வெள்ளம், இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் பள்ளி கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்களை தங்க வைக்க தேவையான முன்னேற்பாடுகளை அலுவலர்கள் செய்ய வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வெள்ளம் பற்றிய விழிப்புணர்வு பலகையை அமைக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து நீர்நிலைகள், பாசன கால்வாய்கள், பிற கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்புகள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை தூர் வாருதல், கால்வாய்களை சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பருவமழை காலங்களின் போது சூறாவளிக்காற்றினால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் கீழே விழ நேர்ந்தால் அவற்றை உடனுக்குடன் அகற்ற தேவையான எந்திரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்கம்பங்கள் கீழே விழும்போது உடனடியாக மின் வினியோகத்தை துண்டித்து சீரமைப்பு பணி நடந்த பின்னர் மீண்டும் மின் வினியோகம் செய்ய வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படும் கிராமங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கிடுவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள போதுமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் மற்றும் வெள்ளச்சேதங்கள் குறித்து 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி, தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story