உம்பளச்சேரி ஊராட்சியில் அடப்பாற்றின் கடைமடை அணையில் நீர்வரத்தினை கலெக்டர் ஆய்வு
உம்பளச்சேரி ஊராட்சியில் அடப்பாற்றின் கடைமடை அணையில் நீர்வரத்தினை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.
வாய்மேடு,
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடைமடை அணைகளில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியம் கள்ளிமேடு ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் அடப்பாற்றின் குறுக்கே ஆசிய வங்கி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.9.6 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அணையின் கட்டுமான பணிகளையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வரும் வண்டல்-அவரிக்காடு இணைப்பு பாலத்தின் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் அடப்பாற்றின் கடைமடை அணையில் நீர்வரத்தையும், பிரிஞ்சுமூலை பகுதியில் அரிச்சந்திரா நதியின் கடைமடை அணையில் நீர்வரத்தையும் அவர் பார்வையிட்டார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோடிவிநாயக நல்லூர் பகுதிக்கு சென்ற கலெக்டர் சுரேஷ்குமார், கடைமடை அணைகளில் இருந்து பாசனத்திற்காக தேவையான தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாகவும், தண்ணீரை முறையாக பாசனத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருவேட்டைச்செல்வம், இணை இயக்குனர் (வேளாண்மை) நாராயணசாமி, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சண்முகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story