திருவாரூர் தொகுதியில் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி


திருவாரூர் தொகுதியில் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 21 Sept 2018 7:17 AM IST (Updated: 21 Sept 2018 7:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதியில் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் பகுதியில் அமைச்சர் காமராஜ் நேற்று பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையொட்டி திருவாரூர் மடப்புரத்துக்கு சென்ற அவர் அங்கு உள்ள பாலத்தை பார்வையிட்டார்.

அப்போது அவரிடம், பொதுமக்கள் பாலத்தை சீரமைத்து, விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பாலத்தை விரிவுபடுத்துவது தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருவாரூர் சீனிவாசபுரம்-மருதப்பட்டினம் இணைப்பு நடை பாலத்தையும், கிடாரங்கொண்டான் மாரியம்மன்கோவில் சாலையை சீரமைத்தல், அடியக்கமங்கலம் ஜமாத் குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தில் தடுப்புச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருவாரூர் நகரில் உள்ள மதுரா நகர், வடக்கு கொத்த தெரு, புதுத்தெரு, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து தேவையான அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி கலெக்டர் முருகதாஸ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திரு வேட்டைசெல்வம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், முன்னாள் வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் நகர, ஒன்றிய பகுதிகளில் சாலைகள், பாலங்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தோம். இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். திருவாரூர் பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப் படும்.

தஞ்சை-திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையை விரிவுபடுத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதன் காரணமாக பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் குறித்து யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் அ.தி.மு.க. அரசு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதை வைத்து தான் வெற்றி, தோல்வி அமையும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story