நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நொய்யல்,
நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. நேற்று முன்தினம் நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய நீரில், திருப்பூர் சாயக்கழிவு கலந்து வந்ததால் நிறம் மாறிய நிலையில் இருந்தது. மேலும் இந்த மாசடைந்த நீரானது நொய்யல் பாசன விவசாய நிலங்களுக்கு செல்வதால் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுடன் நீர் வருவதன் எதிரொலியாக நிலத்தடி நீர் மாசடைந்ததால், விவசாய கிணறு, ஆழ்துளை கிணற்று நீரில் குளித்தவர்களுக்கு அரிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாகவும், இந்த நீரை அருந்திய ஆடு, மாடுகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாகவும் விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே திருப்பூரிலுள்ள சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, நொய்யல் ஆற்றில் கழிவினை கலந்தது யார்? என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலக்காத வகையில் ஆற்றங்கரையோரமாக தடுப்புச்சுவர் அமைத்தல் என்பன உள்ளிட்ட திட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டபேரவையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் அதன் பின்னரும் சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆறுகள் பசுமை சங்க தலைவர் நரிகாட்டு வலசு ராஜமாணிக்கம் கூறியதாவது:- நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்கும் பிரச்சினை குறித்து, கரூரில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போதும் எடுத்துரைக்கிறோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. நொய்யல் ஆற்றில் வரும் கழிவுநீரானது, நேராக காவிரியில் கலப்பதால் அந்த நீரும் மாசடைகிறது. இதனால் குடிநீர் ஆதாரமான காவிரியை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே கரூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து சாயப்பட்டறை ஆலை உரிமையாளர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும். சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story