புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட வந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட வந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் அரசு பள்ளி, எல்.ஐ.சி. அலுவலகம், வட்டார வளமையம் போன்றவை உள்ளன. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நேற்று டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், கருணாகரன் மற்றும் ஏராளமான போலீசார் டாஸ்மாக் கடை பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சலோமி தலைமையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட பெண்கள் வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடுவதற்கு போலீசார் அனுமதி வழங்காததால், தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பரணி, கோட்ட கலால் அலுவலர் மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று பழனியப்பா கார்னர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story