ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டு: நான் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி


ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டு: நான் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 8:09 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கூறியுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்காக நான் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 

மு.க.ஸ்டாலின் கூறியுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்காக நான் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தவறான பிரசாரம் 

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும், மீண்டும் தவறான பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார். அது காற்றாலை மின்சாரம் கிடையாது. நவம்பர், டிசம்பரில் காற்றாலை மின்சாரம் முழுமையாக உற்பத்தியாகாது என்பதை அவர் நினைவில் கொள்ளவில்லை. அவர் கொடுத்து உள்ள அறிக்கை என்னிடமும் உள்ளது. இதனை கண்டுபிடித்ததே தமிழ்நாடு மின்சார வாரியம்தான். நெல்லை பகுதியை சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் தான் கண்டுபிடித்தார்கள்.

தூத்துக்குடியில் உள்ள இந்த் பாரத் என்னும் நிறுவனம் சென்னை மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்து இருக்கிறார்கள். அவர்கள் மின்சாரம் உற்பத்தி செய்யாமலே தொகையை பெற்றுக் கொண்டனர். மேற்படி நிறுவனங்களுக்கு நமது அனல்மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் சென்று உள்ளது. இதனால் அந்த பணம் மின்சாரவாரியத்துக்கு வரவேண்டிய பணம். இதனை கண்டுபிடித்து வழக்கு தொடுத்து, 3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உள்ளோம். எதிர்கட்சி தலைவர் நேற்று மாலையில் மீண்டும் பேட்டி கொடுத்து உள்ளார். மனசாட்சியை அடகுவைத்து விட்டுபேசுவதாகவும், ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் கூறி உள்ளார்.

பிடிவாதம் 

எதிர்க்கட்சி தலைவர், நேற்று கொடுத்த அறிக்கையில் எங்கு காற்றாலை மின்சாரத்துக்கு நாங்கள் பணம் கொடுத்து இருப்பதாக உள்ளது என்பதை சொல்லுங்கள். எந்த காற்றாலை நிறுவனத்துக்கு பணம் கொடுத்து உள்ளோம் என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய தொகையை தர வேண்டும் என்று நாங்கள் தான் நோட்டீசு அனுப்பி உள்ளோம். தவறான தகவலை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். யாரோ கொடுத்த அறிக்கையை, பார்க்காமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் காரணத்தால் எடுத்த காரியத்தில் பின்வாங்கினால், கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் அழகல்ல என்பதால், பிடித்த வாதத்திலேயே இருக்கிறார்.

ராஜினாமாவா? 

நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். மின்சார வாரியத்தில் இருந்து காற்றாலைக்கு பணம் கொடுத்து இருந்தால், ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லலாம். ஆனால் நாங்கள் பணம் கொடுக்கவே இல்லை. எங்களுக்குத்தான் பணம் வர வேண்டும். மின்சார வாரியம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ரூ.9 கோடியே 17 லட்சத்துக்கு 22 சதவீதம் வட்டியுடன், ரூ.11 கோடியே 78 லட்சத்தை இந்த் பாரத் நிறுவனம், மின்சார வாரியத்துக்கு தர வேண்டும் என்று நோட்டீசு அனுப்பி, உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்று வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதனை புரிந்து கொள்ளாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியிலும் இதே போன்ற நிலை இருந்தது. அதுவும் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதனை நான் தவறு என்று சொல்லவில்லை. அவர்கள் தான் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள்.

பொய் கூறுகிறார் 

பொதுவாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்த காற்றாலைகளை அதிகம் வைத்து இருப்பது மேற்கு மண்டலத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள்தான். மேற்கு மண்டலத்தில் தி.மு.க. எப்போதும் வெற்றி பெற முடியாமல் உள்ளது. அந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்காக, காற்றாலை அதிபர்கள் மீது கோபத்தை திருப்புகிறார் என்றுதான் நினைக்கிறேன். ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். எடுத்த காரியத்தில் பின்வாங்கக் கூடாது என்பதற்காகவும், பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்ற அடிப்படையில் அவர் கூறி வருகிறார். நானும் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இது மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story