பரமக்குடி தரைப்பாலத்தில் திடீர் பள்ளம், போக்குவரத்து நிறுத்தம்
பரமக்குடி தரைப்பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப்பார்க்க தினமும் காலை, மாலை நேரங்களில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைகை ஆற்றிற்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தரைப்பாலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பாலத்தின் கீழே தண்ணீர் செல்வதால் பள்ளத்திற்குள் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் தரைப்பாலத்தில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதவிர பாலத்தின் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இருந்தது. மேலும் வைகை ஆற்றில் தண்ணீர் வருவதையொட்டி முன்னதாக பாலத்தில் செம்மண் கொட்டி பெயரளவில் சீரமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.