ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை


ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Sep 2018 10:45 PM GMT (Updated: 21 Sep 2018 7:14 PM GMT)

அஞ்செட்டியில் ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி பஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் ரமேஷ். ஜவுளி வியாபாரி. கீழ் தளத்தில் ஜவுளி கடையும், மேல் தளத்தில் வீட்டிலும் குடியிருந்து வருகிறார். இவரது தம்பி வீடு கிரஹபிரவேச விழாவை முன்னிட்டு ரமேஷ் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஓசூருக்கு சென்றார்.

நேற்று மாலை அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 லட்சம் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து ரமேஷ் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஜவுளி வியாபாரி ரமேஷ் வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை போனதாகவும், அதே நேரத்தில் வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றார்களா? நகையை பார்க்காமல் அப்படியே விட்டு சென்றார்களா? என்பது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story