சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது


சென்னைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.25½ லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 22 Sept 2018 4:15 AM IST (Updated: 22 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு ஒரே நாளில் விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.25½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது பக்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 45) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர் அணிந்து இருந்த ‘கோட்’டில் இருந்த பட்டன்கள் மற்றும் அலங்கார பட்டன்கள் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பிரித்து சோதனை செய்தபோது, பட்டன்கள் அனைத்தும் தங்கத்தில் செய்யப்பட்டது என தெரியவந்தது.

அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் தங்க பட்டன்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த செனனையை சேர்ந்த ஆரோக்கியம்(51) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் 2 தங்க ‘கீ செயின்கள்’ மற்றும் தங்க கம்பிகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த பிரவின்(46) என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவரிடம் கேக் பெட்டி இருந்தது. அந்த பெட்டியை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதில் கேக்கின் நடுவில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 3 பேரிடமும் இருந்து ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 850 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை யாருக்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்கள்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பிடிபட்ட 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story