ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு


ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 22 Sept 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 18 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திண்டிவனம், 


திண்டிவனம் மேற்கு கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சம்பத் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு, புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு தூங்க சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் நேற்று காலை பழைய வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகையை காணவில்லை.

கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு தூங்க சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3¾ லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story