மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று பஸ் மீது மோதிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்த வீடியோ காட்சி வாட்ஸ்–அப்பில் வைரலாக பரவி வருகிறது.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செக்கானூரணி ஊத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயன். அவருடைய மகன் மதுசூதனன் (வயது 21). இவர் தனது நண்பர்கள் அர்ஜூன்(22), சுகுமார்(18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தேனூருக்கு சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை மதுசூதனன் ஓட்டினார். மது போதையில் அவர்கள் இருந்ததாகவும், வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மேலக்கால்–தேனூர் பிரிவு சாலை வளைவில் அவர்கள் சென்றபோது அந்தவழியாக வந்த அரசு பஸ் மீது மோதியதாகவும் தெரியவருகிறது.
இதை சற்றும் எதிர்பாராத அரசு பஸ் டிரைவர் சட்டென்று பஸ்சை நிறுத்திவிட்டார். இதனால் கீழே விழுந்த 3 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் அரசு பஸ் மீது மோதிய காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சி வாட்ஸ்–அப்பில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் நாகேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அய்யரூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.