காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 2 விவசாயிகள் பலி


காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 2 விவசாயிகள் பலி
x
தினத்தந்தி 21 Sep 2018 11:45 PM GMT (Updated: 21 Sep 2018 7:34 PM GMT)

ஓசூர் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 2 விவசாயிகள் உடல் கருகி இறந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி பஞ்சளதோனை கிராமத்தை சேர்ந்தவர் சித்தமல்லப்பா (வயது 62). விவசாயி. இவர் தனது நிலத்தில் ராகி, நிலக்கடலை பயிரிட்டுள்ளார். வனப்பகுதியையொட்டி இவரது நிலம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் வயலுக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

தற்போது நிலக்கடலை அறுவடைக்கு தயாராக இருந்ததால் காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்காக சித்தமல்லப்பா நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் அருகில் உள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான சிவனப்பா (30), கெம்பன் (45) ஆகியோர் தங்களின் மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டனர். நேற்று முன்தினம் மாலை வரை மாடுகள் திரும்பவில்லை.

இதனால் விவசாயிகள் சிவனப்பா, கெம்பன் ஆகிய 2 பேரும் மாடுகளை தேடிக் கொண்டு சித்தமல்லப்பாவின் விவசாய நிலம் பக்கமாக சென்றனர். மின்வேலி இருப்பதை அறியாமல் சென்ற அவர்கள் 2 பேரும், அதில் சிக்கிக்கொண்டனர். அப்போது மின்சாரம் பாய்ந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிவனப்பா, கெம்பன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் மாடுகளை தேடி சென்ற சிவனப்பா, கெம்பன் ஆகிய 2 பேரும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் நேற்று காலை இருவரையும் தேடி பார்த்தார்கள். அப்போது சித்தமல்லப்பாவின் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் இறந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிவனப்பா, கெம்பன் ஆகியோரின் உடல் களை கண்டு கதறி அழுதனர். மேலும் இது குறித்து அவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்- இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்தமல்லப்பாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காட்டுப்பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி 2 விவசாயிகள் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story