காரில் கடத்திவரப்பட்ட 150 மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் நேற்று பெரிய கங்கணாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரின் பின்பக்க இருக்கையில் ஒருவர் போர்வையை போர்த்தி தூங்குவது போல் இருந்தது.
இதையடுத்து அந்த போர்வையை போலீசார் விலக்கி பார்த்தனர். ஆனால் அதில் யாரும் இல்லை. அதற்கு பதிலாக தலையணைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த தலையணைகளை வெளியே எடுத்தனர். அப்போது அதற்கு கீழ் 150 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (வயது 36) என்பதும், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக நூதன முறையில் மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இது பற்றி கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 150 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story