ஈரோட்டில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 4 வழக்குகள் பதிவு
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது ஈரோட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஈரோடு,
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் எச்.ராஜா. இவர் பொது இடங்களில் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் ஐகோர்ட்டு மற்றும் போலீஸ் துறை குறித்து அவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் குற்றவழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே எச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத்தொடங்கி உள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் எச்.ராஜா மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு:–
ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வெ.குமரகுருபரன் கடந்த மார்ச் மாதம் 6–ந் தேதி ஈரோடு டவுன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டர் இணையதளத்தில் ஜாதி, மத பிரிவினைகளை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்தும் விதத்திலும், பெரியார் சிலையை உடைப்போம் என்றும் பதிவுகள் செய்து உள்ளார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த புகார் மீது ஈரோடு டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெ.சரவணன் வழக்கு பதிவு செய்து உள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி உபைதுல்லா என்பவர் கடந்த மார்ச் 6–ந் தேதி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எச்.ராஜா மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலையை அகற்றப்பட்டதை போல தமிழகத்திலும் ஈ.வே.ரா.சிலைகள் அகற்றப்படும் என்று கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. எச்.ராஜாவுக்கு இது புதிது அல்ல. பலமுறை ஜாதி, மத வேறுபாடுகளை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகார் மனுவை விசாரித்து வந்த டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெ.சரவணன் வழக்கு பதிவு செய்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 18–ந் தேதி முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளருமாக அந்தியூர் ப.செல்வராஜ் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவருடைய டுவிட்டர் இணையதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ள குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம், ஆளுனரிடம் கேட்டதுபோல நிருபர்கள் கேள்வி கேட்பார்களா?, மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என்று எங்கள் கட்சியையும் (தி.மு.க.), கட்சி தலைவர்களின் நன்மதிப்பையும் பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மிரட்டும் வகையிலும் கூறி உள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராஜ் கூறி இருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த ஈரோடு டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சி.பெரியசாமி வழக்கு பதிவு செய்தார்.
இவ்வாறு ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் மட்டும் நேற்று முன்தினம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி கடந்த மார்ச் மாதம் 3–ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தமிழகத்தின் மிகப்பெரிய தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும், ஜாதி இல்லை என்று சொன்னவரும், இந்த மண்ணின் மைந்தரும், பகுத்தறிவாளருமான தந்தை பெரியாரை ஜாதி வெறியன் என்றும், அவரது சிலை தமிழகத்தில் எங்கே இருந்தாலும் உடைக்கப்படும் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆணவமாக பேசி உள்ளார். வன்முறையை தூண்டும் வகையிலும் கலகம் ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசி உள்ளார் என்று அந்த மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்கு பதிவு செய்தார்.
அதன்படி ஈரோட்டில் 2 போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த 4 வழக்குகளிலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெறித்தனமாக ஆத்திரமூட்டுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் எச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.