சுருளி அருவியில் சாரல் விழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
சுருளி அருவியில் நடக்கும் சாரல் விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சாரல் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு சாரல் விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. நாளை நடக்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டிநடராஜன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். நாளை மறுநாள் நடக்கும் 2-ம் நாள் விழாவில் பார்த்திபன் எம்.பி., கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் சாரல் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சுருளி அருவிக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் வந்தார். அவர் விழா நடைபெறும் திடல், சுற்றுலா பயணிகள் அமரும் இடம், பந்தல் அமைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம், ஒவ்வொரு அரசு துறை சார்பில் அமைக்கப்படும் அரங்குகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சாரல் விழாவின் போது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வனத்துறையினர் கட்டணம் வசூல் செய்ய கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story