கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சென்னைக்கு இளநீர் கொள்முதல் அதிகரிப்பு


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சென்னைக்கு இளநீர் கொள்முதல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 9:54 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சென்னைக்கு இளநீர் கொள்முதல் செய்வது அதிகரித்து வருகிறது.

கம்பம்,


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை, வாழைக்கு அடுத்தபடியாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள இளநீருக்கு சென்னையில் அதிகளவு மவுசு இருக்கிறது. எனவே இளநீர் பறிக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னைக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் உள்ளூர்களில் உள்ள சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 20 ஆண்டுகளை கடந்த தென்னை மரங்கள் நோய் தாக்குதலின் காரணமாக தற்போது படிப்படியாக அழிந்து வருகிறது. அதனால் பழைய மரங்களை அழித்துவிட்டு புதிதாக தென்னங்கன்றுகளை நட்டு வருகிறோம்.

தென்னை மரங்களில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே தேங்காய் பறிப்பு இருக்கும். ஆனால் இளநீர் ஆண்டுக்கு நான்கு முறை பறிக்கலாம். மேலும் தேங்காயை காட்டிலும் இளநீர் விலை இரு மடங்கு அதிகம். இங்குள்ள இளநீர் காய்களை 20 ரூபாய் வரை சென்னையில் உள்ள மொத்த வியாபாரிகள் வந்து அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தேங்காய் விலையோ ரூ.10-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து அனுப்பப்படும் இளநீருக்கு சென்னையில் நல்ல மவுசு உள்ளது. இதனால் எப்போதும் இளநீருக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றனர். 

Next Story