டிப்பர் லாரியை கடத்தி டயர்கள் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


டிப்பர் லாரியை கடத்தி டயர்கள் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Sep 2018 11:15 PM GMT (Updated: 21 Sep 2018 10:15 PM GMT)

ஆத்தூர் அருகே டிப்பர் லாரியை கடத்தி டயர்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 48). இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து மணல் ஏற்றி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 19-ந்தேதி இரவு ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை என்ற இடத்தில் டிப்பர் லாரியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் வந்து பார்த்த போது நிறுத்தி இருந்த இடத்தில் டிப்பர் லாரியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் அதை திருடி சென்று விட்டனர்.

இந்த நிலையில், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன் பாளையம் வாரச்சந்தை கூடும் இடத்தில் ஒரு டிப்பர் லாரி டயர்கள் இன்றி நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெரியசாமி அங்கு சென்று பார்த்தார். அது அவருடைய டிப்பர் லாரி தான். அதில் இருந்த 6 டயர்கள் திருடப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

யாரோ மர்ம ஆசாமிகள் பெரியசாமிக்கு சொந்தமான டிப்பர் லாரியை கடத்தி இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டு டயர்களை திருடி சென்று இருக்கிறார்கள். இது குறித்து ஆத்தூர் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை கடத்தி சென்று டயர்களை திருடி சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் மர்ம ஆசாமிகள் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story