தவறு செய்யும் அதிகாரிகளை கைதிகளோடு சேர்த்து சிறையில் அடைக்கவேண்டும் ஜி.கே. வாசன் பேட்டி


தவறு செய்யும் அதிகாரிகளை கைதிகளோடு சேர்த்து சிறையில் அடைக்கவேண்டும் ஜி.கே. வாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 Sept 2018 3:56 AM IST (Updated: 22 Sept 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

தவறு செய்யும் அதிகாரிகளை கைதிகளோடு சேர்த்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஏற்கப்படக்கூடியது அல்ல. கைதிகளுக்கு சலுகைகள் வழங்கி தவறு செய்யும் சிறைத்துறை அதிகாரிகளை கைதிகளோடு சேர்த்து சிறையில் அடைக்கவேண்டும். அப்படி செய்தால் தான் மீண்டும் அவர்கள் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் கவர்னர் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

எச். ராஜா, நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியது பற்றி கேட்கிறார்கள். பொதுவாக மேடையில் பேசுபவர்கள் நாகரிகமாக, இடம், பொருள், சூழல் அறிந்து பேசவேண்டும். தான்தோன்றித்தனமாக பேசக்கூடாது. தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சேலம்- சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காவிட்டால் அதனை ரத்து செய்ய போவதாக மத்திய அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்து உள்ளது. ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுபற்றி யோசித்து இருக்கவேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு போதிய அதிகாரம் இல்லை என்று தேர்தல் ஆணையர்கள் கூறி இருப்பது வருந்தத்தக்கது. கூடுதல் அதிகாரங்கள் கொண்ட புதிய தேர்தல் ஆணையத்தை தேர்தல் ஆணையம் தான் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story