வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை-பணம், டி.வி. திருட்டு


வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை-பணம், டி.வி. திருட்டு
x
தினத்தந்தி 22 Sept 2018 3:15 AM IST (Updated: 22 Sept 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம், டி.வி. ஆகியவற்றை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது45). இவர் நேற்று காலை குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அறிவழகன் வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த
டி.வி. திருட்டு போய் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மற்ற பொருட்கள் திருட்டு போகவில்லை. இதுகுறித்து அறிவழகன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவருடைய தந்தை தெட்சிணாமூர்த்தி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதி சாலையில் கடந்து சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்தநிலையில் விசேஷங்கள் முடிந்து நேற்று காலை சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் பணம், பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுரேஷ் எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள். 

Next Story