ஒலிமாசை கட்டுப்படுத்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு தடை நீடிக்கும்
ஒலிமாசை கட்டுப்படுத்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
இதை விசாரித்த ஐகோர்ட்டு விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழாக்களின் போது அதிக ஒலி எழுப்பும் டி.ஜெ. உள்ளிட்ட கருவிகளுக்கு தடை விதித்தனர். இதை எதிர்த்து ஒலி மற்றும் ஒளி அசோசியேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் சாந்தனு கேம்கர் மற்றும் சாரங் கோட்வால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் “டி.ஜெ. உள்ளிட்ட கருவிகள் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் திறன் கொண்டவை. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் 50 முதல் 75 டெசிபல் ஒலியும், இரவு நேரங்களில் 40 முதல் 70 டெசிபல் ஒலியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.எனவே ஒலி மாசு சட்டங்களை மீறும் இந்த கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி விழாக்களில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர்.
ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சட்டம், விதிகள் உருவாக்கப்படும்போது, அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் மனு மீது விரிவான பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.