ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு வருகை தாமிர தாது கழிவு கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது.
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த மே மாதம் 22–ந் தேதி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28–ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஆணையின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆய்வுக்குழு வருகை
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஒரு குழு அமைத்து ஆலையில் ஆய்வு செய்வதாக அறிவித்தது. அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர்.
தாமிர தாது கழிவுகள்
இதையடுத்து அந்த குழுவினர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பகுதிக்கு மாலை 4.50 மணிக்கு வந்தனர். அங்கு தனியாருக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் 3.25 லட்சம் டன் தாமிர தாது கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. அதன் மீது மணல் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதிக்கு சென்று அவர்கள் ஆய்வு செய்தனர். உப்பாற்று ஓடை அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு, கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டனர். கழிவுகள் எவ்வளவு ஆழம் வரை போடப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தனர்.
அப்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பாத்திமா பாபு, ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலை சந்தித்து பேசினர். அவர்கள், ‘ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் இந்த உப்பாற்று ஓடை பகுதியில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நச்சுத்தன்மை ஓடை தண்ணீரில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மற்றும் மக்களுக்கான குடிநீர் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று தூத்துக்குடியில் 11 இடங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. உப்பாற்று ஓடை அருகே மட்டும் 3 இடங்களில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆலையால், அதன் நிர்வாகத்துக்கு லாபம் கிடைக்கலாம். ஆனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஆலை இருக்கக்கூடாது’ என்று கூறினர்.
அறிக்கை
அப்போது ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கூறும்போது, ‘இங்கு உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக வந்து உள்ளேன். இதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பேன்’ என்று கூறினார். மேலும் அவர், ‘இங்கு கொட்டப்பட்டு உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு நான் என்ன பரிந்துரை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றார்.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை தரப்பினர் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பது தனியார் பட்டா நிலம். இங்கு முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
பரபரப்பு
அரைமணி நேர ஆய்வுக்கு பிறகு மாலை 5.20 மணிக்கு ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, அங்கிருந்த சிலர் உப்பாற்று ஓடையில் கழிவை கொட்டி மூடி உள்ளனர். இதனை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.=
Related Tags :
Next Story